Wednesday 30 November 2011

அடிக்குழம்பும்... ஆனைவாயும்...

- அருண். கோ.
“அம்மா பசிக்குதும்மா...சமையலறையைப் பார்த்துக் கத்தினேன்.
“தோ.. வரேன்பா.. உள்ளிருந்து கேட்டது அம்மாவின் குரல்.
“ஜெயா... மணி... தம்பியை கூட்டிட்டு மாடிக்கு போ... சாப்பாடு எடுத்திட்டு வந்திடறேன்...
அண்ணனும் அக்காவும் என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். படியில் ஏறும்போது அவர்களை பார்த்துக் கேட்டேன்.
“இன்னிக்கு தோசை இல்லியா...?
“ஆமான்டா, தோசை கிடையாது. சாதம் தான். அம்மாவே பிசைஞ்சு தரேன்னு சொன்னாங்க
மாடியில் கால் வைத்தவுடனேயே, ‘சில்லென குளிர்காற்றின் ஸ்பரிசம் பட்டது. பக்கத்து வீட்டு கூரையிலிருந்து ரேடியோவின் கரகரப்புச் சப்தம் காற்றில் கலந்தது. துணி காயப்போடும் கொடியின் கீழ், இடம் பார்த்து உட்கார்ந்துக்கொண்டோம். வானில் நிலவும் அதனைச் சுற்றி நட்சத்திரப் பட்டாளங்களும் இருட்டில் மிதந்தபடி எங்களை பார்த்துச் சிரித்தன.
சுரீரென வத்தக்குழம்பின் வாசம் மூக்கைத் துளைக்க... கையில் பாத்திரமும் தட்டுமாய் அம்மா படியேறி வருவது தெரிந்தது.
“என்னம்மா... மறுபடி மறுபடி சாதம் தானா...? நான் சிணுங்க...
“இல்லப்பா... இன்னிக்கு மட்டும் தான். மதியம் வச்ச சாதமே அதிகமா இருக்கு என்றபடி பாத்திரமும், கன்னி (இளம்) மாங்காய் அடங்கிய பரணி மற்றும் தண்ணீர் சொம்பும் வைத்தாள். உப்பேறிய அந்தச் சிறு சிறு மாங்காயின் வாசமும் மூக்கினுள் குடி புகுந்தது.
பாத்திரத்திலிருந்த சாதத்தில் மோர்விட்டு பிசைய ஆரம்பித்தாள். மூன்று பேரும் அம்மாவிடம் நெருக்கமாய்ச் சுற்றி உட்கார்ந்தபடி, ஒய்யாரமாய் இரவு உணவிற்கு ஆயத்தமானோம்.
இன்றல்ல... நேற்றல்ல... பலமுறை இதுபோல் சாப்பிட்டிருக்கிறோம். இதற்காக ஏங்கியும் இருக்கிறோம்.
நன்கு பிசைந்த மோர் சாதத்தில், இடது கையால் கரண்டி எடுத்துச் சிறிதளவு வத்தக்குழம்பு சோ்த்து, ஒரு சிறிய துண்டு மாங்காய் வைத்து, அவரவர் கையடக்கத்திற்கேற்றவாறு உள்ளங்கையில் சாதம் வைப்பாள். பள்ளிக்கூட நடவடிக்கைகளை விசாரிப்பாள். கதை சொல்வாள், குறள் சொல்வாள், நன்னெறி விதைப்பாள். பேசிக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கவளத்திலும் குழம்பும், மாங்காயும் சோ்க்கத் தவறுவதில்லை. ஊட்டிய வாயில் மாங்காய் இல்லையே என்று நாவு யோசிக்கும்போதே ஓரமாய் அந்த உப்புச் சுவை மாங்காயைக் காட்டிக் கொடுக்கும்.
ஒவ்வொரு கவளமும் வயிற்றில் சுகமாய் இறங்கும். தோசையை பற்றிய எண்ணத்தையே மறந்து உற்சாகமாய் உண்ணுவோம். நானும் பல முறை தனியே பிசைந்து, நடுவே குழித்துக் குழம்பு வைத்துச் சாப்பிட்டிருக்கிறேன். .. ஆனால், அம்மா கையால் சாப்பிடும் இந்தச் சுவை... சுகம் வந்ததே இல்லை.
ஒவ்வொரு முறையும், அம்மாவையும் ஒரு வாய் சாப்பிடச் சொல்லவேண்டும் என்று நினைப்பேன். ஆனால், உண்ணுகிற களிப்பில் அந்த நினைப்பு மறந்துவிடும்.
இந்த உற்சாகத்தைக் குலைக்கும் வகையில், கடைசி ரவுண்ட் வர...
“ஆளுக்கு இன்னும் ஒரே வாய் தான்என்ற எச்சரிக்கை மணி அடிப்பாள்.
வயிறு நிரம்பியிருந்தாலும், மனம் ஒப்பாது. கடைசி வாயும் முடிந்து, அடியிலிருக்கும் சாதப் பருக்கையெல்லாம் ஒன்று திரட்டி, எடுத்து... உற்சாகத்திற்கு உச்சகட்டமாய்...
அடிக்குழம்பு... ஆனைவாய்க்கு...என்பாள்.
முதலில், இந்தப் பதத்திற்கு அர்த்தம் புரியாத காரணத்தினால், முழித்திருக்கிறேன். அடியிலிருந்ததைத் திரட்டி, குழம்பில் நன்கு ஊறிய நீராய் இருக்கும் அந்தக் கவளத்திற்காக எனது அண்ணனும், அக்காவும் யானையைப் போல் வாய் திறந்திருப்பதைப் பார்த்தவுடன், நானும் வாயை அகலத் திறந்துக்கொள்வேன்.
“போன முறை உனக்குக் கொடுத்தாச்சு. இப்போ அக்காவுக்கு என்றபடி அக்காவின் வாயில் ஊட்ட...
ஏமாற்றத்தில் சிணுங்குவேன். அதையும் தாள முடியாமல், இந்தா... பூனை வாய்க்குஎன்று சிரித்தபடி கையிலிருப்பதைக் கீழுதட்டில் வழிப்பாள். அதுவும் தேவாமிர்தமாக இனிக்கும்.
என்னவொரு சுவை.... என்னதொரு சுகம் ... !!!

50 வருடங்களுக்குப் பிறகு
2011-ம் ஆண்டு
      ஏஸி ரெஸ்டாரெண்டில் அந்த டிப்டாப் ஆசாமி முகத்தில் செயற்கை புன்னகையுடன் இயந்திரத்தனமாய் ஸ்பெஷல் தாளி மீல்ஸ் ஒன்றை நான் உட்கார்ந்திருந்த மேஜையில் வைத்தான். பெரிய வட்ட தட்டில் ஸ்வீட், பொரியல், ஊறுகாய் என வட்ட வட்ட சிறிய கிண்ணங்கள் அணிவகுத்தன. ஒவ்வொன்றாய் தட்டிற்கு வெளியே எடுத்து வைக்கும் போது, ஊறுகாய் கிண்ணத்திலிருந்த அந்த உருண்ட சிறு வடு மாங்காயின் மீது என் பார்வை பட்டது. சோம்பிக் கிட்ந்த என் கடந்த கால நினைவுகள் உசுப்பப்பெற்று, உயிர் வந்தன.
     தாயிடம் நிலாச்சோறு சாப்பிட்ட நாட்கள் என்னை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு கலங்கடித்ன. பசியிருந்தும் சாப்பிடமுடியவில்லை.
      தற்போது, அன்பாய் ஒரு பூனைவாய் கொடுக்கக் கூட... யாரும் இல்லை. கட்டுபடுத்த முடியாமல், கண்கள் பனித்தன.
அன்பினால் பிசைந்த ஈடில்லா அந்த தயிர்சாதம் எங்கே...?
அடிக்குழம்பு ஊட்டிய அன்னையின் கைகள் எங்கே...?
  எனது பூனைவாய் உதட்டில் தடம் பதித்த அந்த விரல்கள் எங்கே?
அய்யோ... அம்மா... அம்மா... அம்மா...

ஸ்டார் ஓட்டலில் ஏஸி ரெஸ்டாரென்டில், கோட் டை என எக்ஸிகியூட்டிவ் சூட் சகிதமாய், தனியாய் உட்கார்ந்தபடி தாரை தாரையாய் கண்ணீர் வடிக்கும் என்னை எல்லோரும் விசித்திரமாய் பார்த்தார்கள்.

I

மாறாத மாற்றங்கள்

-- அருண். கோ.
2025-ம் ஆண்டு...

      அந்த நீல நிற மெல்லிய கார் அவனை இலகுவாய் இறக்கி விட்டது.

‘ஸ்...ஸ்...மாலை நேரமானாலும், வெப்பக் காற்று சட்டெனத் தாக்கியது.
தான் வந்தது ஏஸி கார் என அப்போது தான் அவனால் உணர முடிந்தது.
காரிலிருந்த போலீஸ் அவனைப் பார்த்துக் கை காட்டினான். கார் நகரத் துவங்கியது. தண்டனைக் கைதிகளுக்கான சட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று போலிருக்கிறது. கைதிகளைத் தண்டனைக் காலத்திற்குப் பிறகு மரியாதையாய் வீடு வரை விட்டுச் செல்வது சற்று இதமாகத்தான் பட்டது அவனுக்கு.

நின்ற இடத்திலிருந்து அண்ணாந்து பார்த்தான். எங்கு பார்த்தாலும் விண்ணை முட்டும் அப்பார்ட்மென்ட் வீடுகள்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுக்கும் மேலிருக்கும் அவன் அங்கு வந்து. அது தான் பிறந்த இடம் தானா என்று வியக்குமளவிற்கு எல்லாம் புதியதாய் இருந்தன.

அந்த வளாகத்தில் நுழைந்த போது, செக்யூரிட்டி ஓடி வந்து விசாரித்தான். அவனது சித்தப்பா ‘காத்தமுத்துவைப் பற்றிச் சொன்ன போது, அவர் கொடுத்ததாக ஒரு பையையும், அவன் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட வீட்டின் சாவியையும் கொடுத்தான்.

லிப்ட் ஏறி ஏழாவது மாடிக்கு வந்தான். தீப்பெட்டி, தீப்பெட்டியாய் வீடுகள். கதவைத் திறந்து உள்ளே வந்தான். இது நாள் வரை வாடகைக்கு விடப்பட்ட வீடு, தான் வருவதறிந்து, காலி செய்யப்பட்டிருப்பதை, முகத்திலடித்த பெயின்ட் வாசத்திலிருந்து தொந்துக் கொண்டான். ஹால், ஒரு சிறிய அறை, குளியல் மற்றும் கழிவறை எனச் சிக்கனமாயிருந்தது வீடு. ஆங்காங்கே... டிவி, பிரிட்ஜ் எனத் தேவையான பொருட்களும் கண்ணில் பட்டன.

ஹாலுக்குப் பக்கத்திலுள்ள பால்கனிக்கு வந்து நோட்டமிட்டான். ஏழாவது மாடி என்பதால் நகரம் முழுவதும் ஒரு சேர பார்க்க முடிந்தது. எங்கு பார்த்தாலும், சாலைகளுக்கு மத்தியில் உயர உயரமாய் செல் டவர்களைக் காண முடிந்தது.

சவரம் செய்யப்படாத தாடையைச் சொறிந்தபடி யோசித்தான்... நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்தன... அரண்மனை போல் அவனது மாமாவின் வீடு, எதிரே ஒரு ஆல மரம், எப்போதும் சல சல வென சப்தத்தில் திளைக்கும் பறவைகள், வாசலிலே கூடும் சாதி சனங்கள், நணபர்கள் இப்படி அவன் நினைவிலிருந்த எந்தச் சுவடுகளும் தற்போது அங்கு இல்லை.
கால மாற்றத்தில் எல்லாம் மறைந்து போயின. மாமா அமைச்சராக இருந்ததினால், பணம்,  பகட்டு, அதிகாரம் என ஆட்டம் போட்டதையெல்லாம், ஆட்சி மாற்றம் சட்டென எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டது. மேலும், காலச்சக்கரம் அவனைத் துரத்தியது. கீழே குப்புறத் தள்ளி அவனைக் குற்றவாளியாக்கியது. சொந்த பந்தங்களெல்லாம் ‘சர்வைவல்என்ற நிர்பந்தத்தில் எல்லாம் கலைந்து ஓடி காணாமல் போனார்கள். எத்தனையோ வழக்குகள்.... எத்தனையோ மன்னிப்புகள். தண்டனை காலம் ஒரு வழியாய் முடிந்து தற்போது தான் திரும்பியிருக்கிறான்.

வாழ்க்கையையே புரட்டிப் போட்ட கடந்த கால நிகழ்வுகளை ஜீரணிக்க இயலாமல் தவிக்கும் நேரத்தில், வெளியுலக இமாலய மாற்றங்களும் அவனைப் பாடாய் படுத்தியது. பிரமிக்க மட்டுமல்லாமல் அவனை கலவரமும் அடையச் செய்தது. எங்கு நோக்கினும் மாற்றம்... மாற்றம்... மாற்றமே.

இப்படிப்பட்ட எண்ணச் சிதறல்களில், எதிர்காலக் கவலையில் உள்ளே வந்து பதட்டமாய்ச் சோபாவில் உட்கார்ந்தான். சோபாவிலிருந்த ரிமோட் அவனறியாமல் அழுத்தப்பட... டிவி சப்தத்துடன் உயிர்பெற்றது. அவன் கண்ட காட்சி ---

சன் டிவியில் ‘செல்லம்மாதொடர் எவ்வித மாற்றமுமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது!

I