-- அருண். கோ.
2025-ம் ஆண்டு...
அந்த நீல நிற மெல்லிய கார் அவனை இலகுவாய் இறக்கி விட்டது.
‘ஸ்...ஸ்...’ மாலை நேரமானாலும், வெப்பக் காற்று சட்டெனத் தாக்கியது.
தான் வந்தது ஏஸி கார் என அப்போது தான் அவனால் உணர முடிந்தது.
காரிலிருந்த போலீஸ் அவனைப் பார்த்துக் கை காட்டினான். கார் நகரத் துவங்கியது. தண்டனைக் கைதிகளுக்கான சட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று போலிருக்கிறது. கைதிகளைத் தண்டனைக் காலத்திற்குப் பிறகு மரியாதையாய் வீடு வரை விட்டுச் செல்வது சற்று இதமாகத்தான் பட்டது அவனுக்கு.
நின்ற இடத்திலிருந்து அண்ணாந்து பார்த்தான். எங்கு பார்த்தாலும் விண்ணை முட்டும் அப்பார்ட்மென்ட் வீடுகள்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுக்கும் மேலிருக்கும் அவன் அங்கு வந்து. அது தான் பிறந்த இடம் தானா என்று வியக்குமளவிற்கு எல்லாம் புதியதாய் இருந்தன.
அந்த வளாகத்தில் நுழைந்த போது, செக்யூரிட்டி ஓடி வந்து விசாரித்தான். அவனது சித்தப்பா ‘காத்தமுத்து’வைப் பற்றிச் சொன்ன போது, அவர் கொடுத்ததாக ஒரு பையையும், அவன் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட வீட்டின் சாவியையும் கொடுத்தான்.
லிப்ட் ஏறி ஏழாவது மாடிக்கு வந்தான். தீப்பெட்டி, தீப்பெட்டியாய் வீடுகள். கதவைத் திறந்து உள்ளே வந்தான். இது நாள் வரை வாடகைக்கு விடப்பட்ட வீடு, தான் வருவதறிந்து, காலி செய்யப்பட்டிருப்பதை, முகத்திலடித்த பெயின்ட் வாசத்திலிருந்து தொந்துக் கொண்டான். ஹால், ஒரு சிறிய அறை, குளியல் மற்றும் கழிவறை எனச் சிக்கனமாயிருந்தது வீடு. ஆங்காங்கே... டிவி, பிரிட்ஜ் எனத் தேவையான பொருட்களும் கண்ணில் பட்டன.
ஹாலுக்குப் பக்கத்திலுள்ள பால்கனிக்கு வந்து நோட்டமிட்டான். ஏழாவது மாடி என்பதால் நகரம் முழுவதும் ஒரு சேர பார்க்க முடிந்தது. எங்கு பார்த்தாலும், சாலைகளுக்கு மத்தியில் உயர உயரமாய் செல் டவர்களைக் காண முடிந்தது.
சவரம் செய்யப்படாத தாடையைச் சொறிந்தபடி யோசித்தான்... நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்தன... அரண்மனை போல் அவனது மாமாவின் வீடு, எதிரே ஒரு ஆல மரம், எப்போதும் சல சல வென சப்தத்தில் திளைக்கும் பறவைகள், வாசலிலே கூடும் சாதி சனங்கள், நணபர்கள் இப்படி அவன் நினைவிலிருந்த எந்தச் சுவடுகளும் தற்போது அங்கு இல்லை.
கால மாற்றத்தில் எல்லாம் மறைந்து போயின. மாமா அமைச்சராக இருந்ததினால், பணம், பகட்டு, அதிகாரம் என ஆட்டம் போட்டதையெல்லாம், ஆட்சி மாற்றம் சட்டென எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டது. மேலும், காலச்சக்கரம் அவனைத் துரத்தியது. கீழே குப்புறத் தள்ளி அவனைக் குற்றவாளியாக்கியது. சொந்த பந்தங்களெல்லாம் ‘சர்வைவல்’ என்ற நிர்பந்தத்தில் எல்லாம் கலைந்து ஓடி காணாமல் போனார்கள். எத்தனையோ வழக்குகள்.... எத்தனையோ மன்னிப்புகள். தண்டனை காலம் ஒரு வழியாய் முடிந்து தற்போது தான் திரும்பியிருக்கிறான்.
வாழ்க்கையையே புரட்டிப் போட்ட கடந்த கால நிகழ்வுகளை ஜீரணிக்க இயலாமல் தவிக்கும் நேரத்தில், வெளியுலக இமாலய மாற்றங்களும் அவனைப் பாடாய் படுத்தியது. பிரமிக்க மட்டுமல்லாமல் அவனை கலவரமும் அடையச் செய்தது. எங்கு நோக்கினும் மாற்றம்... மாற்றம்... மாற்றமே.
இப்படிப்பட்ட எண்ணச் சிதறல்களில், எதிர்காலக் கவலையில் உள்ளே வந்து பதட்டமாய்ச் சோபாவில் உட்கார்ந்தான். சோபாவிலிருந்த ரிமோட் அவனறியாமல் அழுத்தப்பட... டிவி சப்தத்துடன் உயிர்பெற்றது. அவன் கண்ட காட்சி ---
சன் டிவியில் ‘செல்லம்மா’ தொடர் எவ்வித மாற்றமுமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது!
I

No comments:
Post a Comment